சென்னை, ஜூலை 14: சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து சென்னைக்குத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்துக்கு, விமான நிலையத்தில் அதிகாரிகளால் தரப்பட்ட அவமானகரமான மரியாதை பலரையும் வேதனைப்படுத்தி இருக்கிறது. புதன்கிழமை இரவு ரஜினிகாந்த் சென்னை திரும்புவதாக "தினமணி' உள்ளிட்ட எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தும், அவரை வரவேற்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படாதது, ரஜினி ரசிகர்களை மிகவும் எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னை திரும்பும் தகவல் கிடைத்ததால் அவரது ரசிகர்கள் புதன்கிழமை மதியம் முதலே மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததே தவிர, தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.
நடிகர் ரஜினிகாந்த், வழக்கமாக முக்கியமான பிரமுகர்கள் விமானத்திலிருந்து வெளியேறும் ஆறாவது வாயில் வழியாக வெளிவந்தார் என்பதும் அங்கே கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து தனக்கே உரித்தான பாணியில் தலைக்கு மேல் கையை உயர்த்தி வணக்கம் தெரிவித்தார் என்பதும்தான் பத்திரிகையில் வெளிவந்த செய்திகள். அதற்கு முன்னால் நடந்த சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டால், ""ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ரஜினிக்கா இந்த அவமானம் என்று நிச்சயம் வேதனைப்படுவார்கள்'' என்றார் விமான நிலைய ஊழியர் ஒருவர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய ரஜினிகாந்தும் மற்றவர்களும் வழக்கம்போல விமானப் பாலம் (ஏரோ பிரிட்ஜ்) மூலம் வெளியே வந்தனர். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இமிக்ரேஷன் என்று அழைக்கப்படும் அனுமதி சோதனைக்குப் பிறகுதான் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமான பிரமுகர்கள் இதுபோல வெளிநாட்டுப் பயணம் முடித்து இந்தியா திரும்புவதாக இருந்தால், அவர்களை விமானத்திலிருந்து இறங்கும் இடத்திலேயே வரவேற்று, இமிக்ரேஷன் அனுமதி அளிப்பது உண்டு.
""தொழிலதிபர்களான "இந்தியா சிமென்ட்ஸ்' சீனிவாசன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், விஜய் மல்லைய்யா போன்றவர்களுக்கு நமது அதிகாரிகள் குழைந்தும் நெளிந்தும் விமானத்திலிருந்து இறங்கியதுமே எல்லா சேவகங்களையும் செய்து, சிறப்பு வாகனத்தில் ஆறாவது வாயில் வரை சென்று வழியனுப்புவார்கள். ஆனால், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் "இமிக்ரேஷன்' சோதனைக்கு நடத்திச் செல்லப்பட்டார். அவர் மூச்சிரைக்க நடந்து வந்ததைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது'' என்று விழிகளில் நீர்கோக்க நமக்குத் தெரிவித்தார் பணியில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்.
அதுமட்டுமல்ல, ""இதுபோன்ற நேரங்களில் பிரமுகர்களை ஏற்றிச் செல்ல டாடா சுமோ போன்ற வாகனங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், ரஜினிகாந்த் ஒரு பழைய பஸ்ஸில் அழைத்துச் சென்று ஆறாவது வாயிலில் இறக்கிவிடப்பட்டார். ரஜினிகாந்த் ஒரு நோயாளியாக சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் என்று தெரிந்தும் விமான நிலைய அதிகாரிகள் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள் ரஜினி ரசிகர்களான விமான நிலைய ஊழியர்கள்.
விமான நிலைய ஊழியர்கள்தான் இப்படி என்றால் நமது காவல்துறையின் செயல்பாடு அதைவிட கண்டனத்துக்குரியது. ரஜினியை வரவேற்க நண்பகல் முதலே ரசிகர்கள் குவிகிறார்கள் என்று தெரிந்தும், பிரமுகர்கள் வெளியேறும் ஆறாவது வாயிலின் அருகில் தற்காலிகமாக அதிக விளக்குகளைப் பொருத்தி அதிகளவில் வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்களா என்றால், இல்லை. அங்கிருந்து ரஜினி வெளியேறும் பாதையில் தடுப்புகள் (பாரிக்கேட்) போட்டிருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. அன்று ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதற்குப் பொறுப்பாவது முதல்வரும் அரசுமாக இருக்கும் என்று தெரிந்தும் காவல் துறை ஏன் முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்று வருத்தப்படாத ரசிகர்களே கிடையாது.
""இத்தனைக்கும் "இமிக்ரேஷன்' சோதனை நடத்தும் இலாகா ரஜினியின் நண்பரான உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கீழ் வருகிறது. விமான நிலையம் அவரது இன்னொரு நண்பரான வயலார் ரவியின் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ரஜினி வருகிறார் என்று ஊரெல்லாம் கொட்டி முழங்குவது இவர்கள் காதில் விழாதது ஏன்?'' என்று ரஜினிக்கு நெருக்கமான சிலர் கேள்வி எழுப்பினார்கள்.
இத்தனை குளறுபடிகளுக்கும் ரஜினி குடும்பத்தினரும் ஒரு காரணம் என்கிறார் ரஜினி ரசிகர் ஒருவர். ""1996-ல் ரஜினி வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா முன்னேற்பாடுகளைக் கவனமாகச் செய்திருந்தார். அதேபோல, ரஜினி குடும்பத்தினர் முதல்வரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டிருந்தால், நிச்சயமாக அவர் தகுந்த ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டிருப்பார். அவர்கள் சொல்லாதது தான் தவறு'' என்று கருத்துத் தெரிவித்தார் அவர்.
""ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. தவறுதான். தமிழகக் காவல் துறையின் புலனாய்வுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது? இவர்கள் ஏன் முதல்வரிடம் முன்கூட்டியே அறிவித்துத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாமல் விட்டார்கள்? இத்தனைக்கும் ரஜினிகாந்துக்கும் தமிழக முதல்வருக்கும் நல்லுறவு இருப்பது அவர்களுக்குத் தெரியாததா என்ன'' என்று கோபமாகக் கேட்பவர்கள் பலர்.
தொழிலதிபர்களுக்கெல்லாம் தொழுதடிமை செய்யும் நமது அதிகார வர்க்கம், தமிழக மக்களின் ஏகோபித்த அன்பையும் அபிமானத்தைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்தை, அதுவும் சிகிச்சை பெற்று அவர் திரும்பும் நிலையில், இப்படி நடத்தியிருக்க வேண்டாம் என்று வருத்தப்படாத ரசிகர்களே இல்லை!
No comments:
Post a Comment