Popular Posts

Thursday, July 14, 2011

NEWS

மத்திய, மாநில அரசுகள் மீது மும்பை மக்கள் கோபம் : குண்டு வெடிப்புகள் தொடர்வதால் ஆவேசம்..

மும்பை: மும்பையை குறிவைத்து, பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், மத்திய, மாநில அரசுகள் மீது, அந்நகர மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். "ஒரு பாவமும் செய்யாத அப்பாவி மக்கள் பலியாவதை, அரசாங்கத்தால் ஏன் தடுக்க முடியவில்லை' என, ஆவேச குரல் எழுப்பியுள்ளனர்.

காயமடைந்த உறவினரை பார்ப்பதற்காக ஜே.ஜே. மருத்துவமனைக்கு வந்திருந்த இளம் பெண் ஆவேசமாகக் கூறுகையில், "எந்த பாவமும் செய்யாத அப்பாவி மக்கள் பலியாவதை பார்க்கும்போது, எனக்கு பயங்கர கோபம் வருகிறது. குண்டு வெடிப்பிலிருந்து, மும்பை மக்கள் மீண்டு விட்டனர் என்ற புகழாரம் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. எங்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் கடமையைச் செய்யத் தவறி விட்டனர்' என்றார்.

ஜவேரி பஜார் அருகே நின்றிருந்த மற்றொரு பெண் கூறுகையில், "இப்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவம், முற்றிலும் மாறுபட்டது. மிகவும் கோபமாக இருக்கிறோம். பீதியாகவும் உள்ளது; அலுவலகத்துக்கு செல்லவே பயமாகவும் உள்ளது. தொடர்ந்து மும்பையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறை தாக்குதல் நடக்கும்போதும், விசாரணை, கண்டன அறிக்கை, ஆய்வு, இழப்பீடு என அறிவிக்கின்றனரே தவிர, பயங்கரவாதத்தை ஒழிக்க, எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் ஏன் சாக வேண்டும்' என, ஆவேசமாக பேசினார். நேற்று காலையில் மும்பையில் பலத்த மழை பெய்தது. இதுகுறித்து மும்பைவாசி ஒருவர் கூறுகையில், "இது வெறும் மழை அல்ல. தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதால், எங்கள் கண்களில் இருந்து வரும் கண்ணீர்' என்றார்.
..நன்றி -தினமலர்

No comments:

Post a Comment